• Thiruvavadudurai Adhinam
  • Thiruvavadudurai Adhinam
  • Thiruvavadudurai Adhinam

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்

ஆதீனக்குருமுதல்வர் அருள்வரலாற்றுச் சுருக்கம்

உலகம் ஓர் குலம்; உலகு அனைத்தும் இன்புற வேண்டும் என்ற பரந்தமனம் படைத்தது ஆச்சாரியப்பரம்பரை. திருக்கயிலையில் தோன்றிய இப்பரம்பரை காலம் பல கடந்த இடையறாது இந்நாள் வரை வளர்ந்து வருகிறது. கயிலைப் பரம்பரையின் மெய்கண்ட சந்தான ஆச்சாரியர்களில் ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியரிடம் உபதேசம் பெற்ற ஸ்ரீஅருள்நமசிவாயரிடம் தீட்சை பெற்றவர் ஸ்ரீசித்தர் சிவப்பிரகாசர். அவரிடம் சிவஞான அபிஷேகமும், உபதேசமும், ஆச்சாரிய பரம்பரையைப் பாதுகாத்து வர திருவாணையும் பெற்று, திருவாவடுதுறையில் ஆதினத்தைத் தோற்றுவித்த முதற்பெரும் குருமூர்த்திகள் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள்.

இவர்கள் சோழ மண்டலத்தில் நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு மேற்கே 3 கி.மீ தொலைவில் அமைந்த மூவலூர் என்னும் பரம்பரைச் சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர்கள். இவர்களது பிள்ளைத் திருநாமம் வைத்தியநாதன் என்பது.இளம் பிராயத்தில் இவர்கள் தம் பெற்றோருடன் புள்ளிருக்கு வேளூரில் (வைத்தீஸ்வரன் கோயில்) ஸ்ரீ வைத்தியநாத சுவாமியை வழிபட்டுத் திருவருளில் ஒன்றிய சிந்தையினராக மனமுருகி நின்றபோது,பெருமானே ஒரு சிவாச்சாரியார் திருமேனி தாங்கி வந்து சிவலிங்கத் திருமேனி ஒன்றினைத் தந்தருளிய பேறுடையவர்கள்.

தல யாத்திரையாகத் தம் அடியார் திருக்கூட்டத்துடன் மூவலூர் சேர்ந்த சித்தர் சிவப்பிரகாசர், சிறிய பெருந்தகையாக விளங்கிய வைத்தியநாதரைக் கண்டார்கள். சிவஞானப் பேற்றிற்கு உரிய குறிகளையும் திருவருட் குறிப்பையும் உணர்ந்து,பெற்றோர் இசைவுடன் பிள்ளையைத் தம்முடன் அழைத்துக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்தார்கள்.

அங்கு ஸ்ரீ சித்தர் சிவப்பிரகாசர் அப்பிள்ளைக்கு ஞானதீட்சை புரிந்து நமசிவாயம் எனத் தீட்சாநாமம் சாத்தி, குரு பரம்பரையில் தாம் பெற்ற சிவஞான உபதேசத்தை அருளிச் சிவஞானந்த அனுபவம் கைவருமாறு அனுக்ரகம் செய்தார்கள். குருமரபில் தாம் பெற்ற ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் பூஜை செய்த ஸ்ரீ ஞான மாநடராசப் பெருமானையும், தம்முடைய ஆத்மார்த்த மூர்த்தியையும் பூஜித்து வரும் அதிகாரத்தையும் வழங்கியருளினார்கள். தாம் வீற்றிருந்த இடத்தில் வரைகீறி அமைக்கப்பெற்ற அறையுள் அமர்ந்து சைவ சித்தாந்த மரபு தழைக்கச் சிவஞான உபதேசம் செய்துவர ஆணையருளி, தாம் திருமறைக்காட்டிற்கு எழுத்தருளினார்கள். ஸ்ரீ நமசிவாய தேசிக மூர்த்திகள் தம் ஞானாசிரியர் திருவாணையின் வண்ணம் அவர் வகுத்த அறையிலிருந்தும், வரும் பக்குவ ஆன்மாக்களுக்குச் சிவஞான உபதேசம் அருளிச் சுத்தாத்துவித சைவ சித்தாந்தப் பரிபாலனம் செய்து வந்தவர்கள்.

இவ்வண்ணம் ஆதீன முதற்பெரும் குருமூர்த்திகளாக வீற்றிருந்து சுத்தாத்துவித சித்தாந்த நன்மரபு தழைக்கச் செய்த ஸ்ரீ நமசிவாயமூர்த்திகள், தங்கள் குரு சந்தானம் வளர்ந்தோங்கி வர, அம்பலவாண தேசிகருக்கு ஞானாபிஷேகம் செய்து துவிதீய ஆச்சாரியராக அமைத்து, ஒரு தை மாதம் அசுவதித்திருநாளில் சித்தாந்த சுத்தாத்துவித முக்தி அடைந்தளினார்கள். ஆதினக் குருமுதல்வர் குருமூர்த்தத்தில் நாள்தோறும் இருகாலம் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாதந்தோறும் அசுவதி நட்சத்திரத்தில் குருமூர்த்திகளுக்குச் சிறப்பு வழிபாடுகளும் தோத்திர நூல்கள் பாராயணமும் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதி வருடம் தை மாதம் அசுவதித் திருநாளில் (மகரத் தலைநாள்) ஆதின முதற்பெரும் குருமூர்த்திகளாக விளங்கும் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளின் குருபூஜை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, இரவு இருவேளைகளிலும் அபிஷேக ஆராதனைகளோடு பத்து நாட்கள் சிறப்பாக நடைப்பெற்று வருகின்றன.

மேலும் ஸ்ரீ நமசிவாய மூர்த்தகளின் திருமேனியானது மூவலூர் (அவதார இல்லம்), காசி கண்ணப்பசாமி மடம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோயில், காசி தர்மம் விநாயகர் திருகோயில், மூவலூர் ஆகிய தலங்களில் சிறப்பு ஆராதனைகளும் மாகேசுவர பூஜைகளும் நடைபெறுகின்றன.

இவ்வாறாக ஸ்ரீ நமசிவாயமூர்த்திகளின் வழிவழி வருகின்ற சிவகஞான உபதேச, அபிஷேக பரம்பரையில், இந்நாளில் இவ்வாதீனத்து 24-ஆவது குரு மகாசந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சித்ராசன சிவஞானபீடத்தில் எழுந்தருளி அருளாட்சி செய்து வருகின்றார்கள்.

குருமரபு வாழ்த்து

கயிலாய பரம்பரையில் சிவஞான
போதநெறி காட்டும் வெண்ணை
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர்
மெய்ஞ்ஞான பானு வாகிக்
குயிலாரும் பொழில்திருவா வடுதுறைவாழ்
குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு
நீடூழி தழைக மாதோ.

- ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள்,
காஞ்சி புராணம்

மங்கலவாழ்த்து முற்றிற்று

மேலும் ஸ்ரீ நமசிவாய மூர்த்தகளின் திருமேனியானது மூவலூர் (அவதார இல்லம்), காசி கண்ணப்பசாமி மடம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோயில், காசி தர்மம் விநாயகர் திருகோயில், மூவலூர் ஆகிய தலங்களில் சிறப்பு ஆராதனைகளும் மாகேசுவர பூஜைகளும் நடைபெறுகின்றன.

இவ்வாறாக ஸ்ரீ நமசிவாயமூர்த்திகளின் வழிவழி வருகின்ற சிவகஞான் உபதேச, அபிஷேக பரம்பரையில், இந்நாளில் இவ்வாதீனத்து 24-ஆவது குரு மகாசந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சித்ராசன சிவஞானபீடத்தில் எழுந்தருளி அருளாட்சி செய்து வருகின்றார்கள்.